Wednesday, March 02, 2011

தமிழ் இலக்கியம், தமிழ்மொழியின் வரலாறு - 1

செந்தமிழ்ச் செம்மொழியின் வரலாறு:

   நமது செந்தமிழ்ச் செம்மொழி இந்தியாவில் முதலில் தோன்றிய இரு முக்கிய மொழிகளில் ஒன்றாகக்  கருதப்படுகிறது. தெலுங்கு, கன்னடம், ம‌லையாள‌ம் ம‌ற்றும் துளு போன்ற தென்னிந்திய மொழிகள் தமிழ்மொழியிலிருந்தே தோன்றியவையாகும். அதன் பின்னர் இம்மொழிகள் தொடர்ச்சியாக‌ வளர்ச்சியடைந்து, தற்போது சமஸ்கிருத இல‌க்க‌ண‌த்தைத் தழுவி வழங்கப்படுகிறது.


    1996-ம் ஆண்டு புள்ளி விவரப்படி உலகம் முழுவதிலும் 8 கோடி 50 லட்சம் (85மில்லியன்) மக்களால் பேசப்பட்டு, ஒரு மொழியை, தாய்மொழியாகக் கொண்டு பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்ட மொழிகளின் பட்டியலில், தமிழ், பதினெட்டாவது இடத்தில் உள்ளது.

மூன்று தமிழ்ச்சங்கங்கள்:

  1. முதற்சங்கம்

  2. இடைச்சங்கம்

  3. கடைச்சங்கம்

     தொல்பழங்காலத்தில், அக்காலப் பாண்டிய அரசர்களின் ஆதரவில், ஒன்றுக்குப்பின் ஒன்றாக மூன்று தமிழ்ச்சங்கங்கள் தமிழாராய்ந்ததாகவும், அக்காலத்தில் தமிழிலக்கியங்கள் பல இயற்றப்பட்டதாகவும் நம்பப்படுகிறது.  இம் முச்சங்கங்கள் சார்ந்த இலக்கியங்களிலே கடைச்சங்க நூல்கள் மட்டுமே தற்போது கிடைத்துள்ளது.

     முன்னிரண்டு சங்கங்களையும் சேர்ந்த நூல்கள், அக்காலங்களில் ஏற்பட்ட கடல்கோள்களின்போது, நாட்டின் பெரும்பகுதியுடன் சேர்ந்து அழிந்து போனதாம். எனினும், முதலிரு சங்கங்கள் இருந்தது பற்றியோ அல்லது அக்காலத்தில் இலக்கியங்கள் இருந்தது பற்றியோ போதிய உறுதியான ஆதாரங்கள் எதுவுமில்லை.

     நக்கீரர் என்னும் புலவரே தானெழுதிய இறையனார் அகப்பொருள் உரை நூலில் இச்சங்கங்கள் பற்றி விபரித்துள்ளார். ஒவ்வொரு சங்கமும் இருந்த காலமும், அச்சங்கங்களில் இருந்த புலவர்களின் எண்ணிக்கைகளையும் இவர் கொடுத்துள்ளார். இதன்படி:
  • முதற்சங்கம் 4440 ஆண்டுகள் நிலைத்திருந்ததாகவும், 4449 புலவர்கள் இருந்து தமிழாய்ந்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது.
  • இடைச்சங்கம் 3700 புலவர்களுடன் 3700 ஆண்டுகள் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
  • கடைச்சங்கம் 1850 ஆண்டுகள் இருந்து, 449 புலவர்களுக்கு இடமளித்துள்ளதாம்.
இதன்படி மூன்று சங்கங்களினதும் மொத்தக் காலம் 9990 ஆண்டுகளாவதுடன், முதற்சங்கத்தின் தொடக்கம் அண்னளவாக 12000 வருடத்துக்கு முன் செல்கிறது. தற்போதுள்ள சான்றுகளின்படி, மேற்படி காலக்கணக்கு நிறுவப்பட முடியாத ஒன்றாகும்.

மேற்கூறிய சங்கங்கள் இருந்தது பற்றியே சில ஆய்வாளர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். எனினும், கிறீஸ்து சகாப்தத்துக்குச் சற்று முன்பின்னாகத் தமிழ்ச் சங்கம் ஒன்று இருந்திருக்கக் கூடும் என்று பலர் கருதுகிறார்கள். புறநானூறு, அகநானூறு போன்ற தொகை நூல்கள், சங்ககாலம் என்று குறிக்கப்படும் மேற்படி காலத்தில் இயற்றப்பட்டது என்பது பெரும்பான்மைத் துணிபு.

     தமிழ் இலக்கியத்தையும், தமிழ் மொழியின் வரலாற்றையும் ஐந்து காலப்பகுதிகளாக வகைப்படுத்தலாம்.

    * சங்க காலம் (கிமு 300 - கிபி 300)

    * சங்கம் மருவிய காலம் (கிபி 300 - கிபி 700)

    * பக்தி இலக்கிய காலம் (கிபி 700 - கிபி 1200)

    * மத்திய காலம் (கிபி 1200 - கிபி 1800)

    * இக்காலம் (கிபி 1800 - இன்று வரை)


                                                                                         (தொடரும்)


Ref:
  1. Wikipedia
  2. Gems from the Treasure House of Tamil Literature by The Tamil Writers Association

2 comments:

  1. அருள்மொழி வர்ம! தங்கள் வலைத்தளத்திற்கு வந்து பார்த்து அசந்து போனேன். முன் எப்போதோ வந்த நினைவும் இருக்கிறது. பின் நிதானமாக வருகிறேன். நாம் நிறைய பேச வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. ஐயாவின் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் நன்றி! எனக்கும் தங்களுடன் பேச விருப்பமாக உள்ளது.
      தங்களின் வலைப்பதிவுகளை வாசித்து பலமுறை வியந்துள்ளேன்.

      Delete