Saturday, March 05, 2011

ப‌த்துப்பாட்டு நூல்கள்

ப‌த்துப்பாட்டு நூல்கள்:

சங்க இலக்கியங்களுள் ஒன்றான‌ ப‌த்துப்பாட்டு நூல்களிலுள்ள‌ பாட‌ல்க‌ள் 103 முத‌ல் 782 அடிக‌ளைக் கொண்ட‌ நீள‌மான பாட‌ல்க‌ள். இப்பாடல்களில் குறிஞ்சிப்பாட்டு மட்டும் அகப்பொருள் பற்றிய பாடல்களையும், ஏனைய பிற பாடல்கள் அக‌ம் அல்ல‌து புற‌ம் எனும் குறிப்பிட்ட வ‌கைப்பாட்டிற்குள் சரியாகப் பிரிக்க‌முடியாத‌ப‌டி உள்ள‌ன.


திருமுருகாற்றுப்படை:
  
     பா அளவை - 317 அடிகள் கொண்ட ஆசிரியப்பா

     பாடியவர் - நக்கீரர்
 

     பாட்டுடைத் த‌லைவ‌ன் - முருகக் கடவுள் திருமுருகாற்றுப்படை:


இது பத்துப்பாட்டு நூல்களுள் முதலில் வைத்து எண்ணப்படுகிற‌து. "ஆற்றுப்படுத்தல்" என்னும் சொல் வழிப்படுத்தல் என்னும் பொருள்படும். திருமுருகாற்றுப்படை ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியும் முருகப் பெருமானின் அறுபடைவீடுகள் ஒவ்வொன்றையும் பாராட்டுவனவாக அமைந்துள்ளது.


மலைப்படுக்கடாம்:


     பா அளவை - 583 அடிகள் கொண்ட ஆசிரியப்பா

     பாடியவர் -  பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்

     பாட்டுடைத் த‌லைவ‌ன் - நன்ன‌ன் வெண்மான் 


இந்நூல் பத்துப்பாட்டு நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் ஆகும். இந்நூற் பாடல்களில், அக்காலத் தமிழரின் இசைக்கருவிகள் பற்றியும் ஆங்காங்கே குறிப்புக்கள் காணப்படுகின்றன. நன்னனைப் பாடிப் பரிசு பெறச்செல்லும் பாணர் நெடுவங்கியம், மத்தளம், கிணை, சிறுபறை, கஞ்சதாளம், குழல், யாழ் போன்ற பலவகை இசைக் கருவிகளை எடுத்துச் செல்வது பற்றிய செய்திகள் கூறப்பட்டுள்ளன.


முல்லைப்பாட்டு:


     பா அளவை - 103 அடிகள் கொண்ட‌ ஆசிரியப்பா
    
     பாடியவர் - நப்பூதனார்
    
     பாட்டுடைத் த‌லைவ‌ன் - த‌லையான்கால‌த்து செருவென்ற‌ நெடுஞ்செழிய‌ன்  

இந்நூல் இத்தொகுதியுள் அடங்கியுள்ள மிகச்சிறிய நூலாகும். இது முல்லைத் திணைக்குரிய நூல், அகப்பொருள் பற்றியது. மழைக்காலத்துக்குமுன் திரும்பிவருவதாகச் சொல்லிப் போருக்குச் சென்ற தலைவன் குறித்த காலத்தில் வரவில்லை. தலைவியோ பிரிவுத் துயரம் தாழாமல் உடல் மெலிந்து வாடுகிறாள். விபரமறியச் சென்று வந்த தோழியரின் உற்சாக வார்த்தைகள் அவள் ஏக்கத்தைக் குறைக்கவில்லை. போரில் வெற்றி பெற்றுத் தலைவன் திரும்பியதும் தான் தலைவி ஆறுதலடைந்து இன்பமுறுகிறாள்.


மழைக்காலம் வருவதை உணர்த்தும் முல்லைப்பாட்டின் முதற்பாடல்:


 "நனந்தலை யுலகம் வளைஇ நேமியொடு
 வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை
 நீர்செல நிமிர்ந்த மாஅல் போலப்
 பாடிமிழ் பனிக்கடல் பருகி வலனேர்பு
 கோடுகொண் டெழுந்த கொடுஞ்செலவு எழிலி"


நெடுநல்வாடை:


     பா அளவை - 188 அடிகள் கொண்ட‌ அகவற்பா

     பாடியவர் - நக்கீரனார்

நூலில் எடுத்தாளப்பட்டுள்ள நிகழ்வுகள் வாடைக்காலத்தில் நிகழ்வதாலும், தலைவனைப் பிரிந்து வாடும் தலைவிக்கு இது நீண்ட வாடையாகவும், போர் வெற்றியைப் பெற்ற தலைவனுக்கு இது ஒரு நல்ல வாடையாகவும் அமைந்தது குறித்தே இது நீண்ட நல்ல வாடை என்னும் பொருளில் நெடுநல்வாடை எனப் பெயர் பெற்றதாகக் கூறுவர்.


இது ஒரு புறப்பொருள் நூலாகக் கொள்ளப்படினும் இதில் பெருமளவு அகப்பொருள் அம்சங்கள் பொதிந்துள்ளன. இந் நூல் அகப் பொருளையே பேசினாலும் புறப்பொருள் நூல்கள் வரிசையில் வைக்கப்பட்டுள்ளது.


சிறுபாணாற்றுப்படை:


     பா அளவை - 269 அடிகள் கொண்ட ஆசிரியப்பா
    
     பாடியவர் - நத்தத்தனார்


     பாட்டுடைத் த‌லைவ‌ன் - ந‌ல்லியக்கோட‌ன்


ஒய்மான் நாட்டு மன்னனான நல்லியக்கோடன் என்பவனைத் தலைவனாகக் கொண்டு எழுதப்பட்ட இந்நூல், அம்மன்னனிடம் பரிசு பெற்ற சிறுபாணன் ஒருவன் தான் வழியிற் கண்ட இன்னொரு பாணனை அவனிடம் வழிப்படுத்துவதாக அமைந்துள்ளது.


பட்டினப்பாலை:
 


     பா அளவை - 301 அடிகள் கொண்ட அகவற்பா


     பாடியவர் - கடியலூர் உருத்திரங்கண்ணனார்


     பாட்டுடைத் த‌லைவ‌ன் - சோழன் கரிகாலன்


இந்நூல் பண்டைய சோழ நாட்டின் வாழ்க்கை முறையையும், அதன் செல்வ வளத்தையும் எடுத்துரைக்கின்ற‌து.


குறிஞ்சிப்பாட்டு:


     பா அளவை - 261 அடிகள் கொண்ட ஆசிரியப்பா


     பாடியவர் - கபிலர்


     பாட்டுடைத் த‌லைவ‌ன் - பிர‌க‌தத்தா (வ‌ட‌ நாட்டு அர‌ச‌ன்)


இந்நூற்பாடல்கள் அகப்பொருள் சார்ந்த பாடல்களாகும். தினைப்புலம் காக்கச் சென்ற தலைவி ஒரு ஆண் மகனிடம் மனதைப் பறி கொடுக்கிறாள். பல காரணங்களினால் அவனைச் சந்திக்க முடியாமல் தவிக்கும் தலைவியின் நிலையை, அவள் தாய்க்கு எடுத்து விளக்குகிறாள் அவள் தோழி. இதுவே குறிஞ்சிப் பாட்டின் உள்ளடக்கம்.


பொருநாறாற்றுப்படை:


     பா அளவை - 248 அடிகள் கொண்ட ஆசிரியப்பா


     பாடியவர் - முடத்தாமக்கண்ணியார்


     பாட்டுடைத் த‌லைவ‌ன் - சோழன் கரிகாலன்


மதுரைக்காஞ்சி:


     பா அளவை - 782 அடிகள் கொண்ட ஆசிரியப்பா


     பாடியவர் - மாங்குடி மருதனார்


     பாட்டுடைத் த‌லைவ‌ன் - பாண்டிய‌ன் நெடுஞ்செழிய‌ன்


இத் தொகுப்பில் உள்ள நூல்களுள் மிகவும் நீளமானது. பாண்டி நாட்டின் தலைநகரமான மதுரையின் அழகையும், வளத்தையும் கூறுகின்ற இந்நூல், அந்நாட்டின் ஐவகை நிலங்களைப் பற்றியும் கூறுகின்றது. இப் பாட்டின் தொடக்கத்தில் தி‌ரைகடல் சூழ்ந்த ஞாலம் பற்றிப் பாடும் புலவர் பிறகு தேன் கூடுகள் நிறைந்திருக்கும் மலையுச்சிகளைப் பற்றியும் கூறுகிறார். இந்த உவமைகள் இயற்கை வளம் குறித்துப் பாடும் பொருட்டு அமைந்தவை அல்ல. வாழ்க்கை அலை போன்று நிலையில்லாதது. எனவே நல்லறங்கள் செய்து மலை போல் என்றும் அழியாப் புகழைத் ‌தேடிக்கொள் என்று மன்னனுக்கு மறைமுகமாய்க் கூறுகிறார்.


     போரின் கொடுமையை விளக்குதல்:


பெரும்பாலான புலவர்கள் மன்னனின் போர்த்திறத்தையும் போரில் பகைவரைக் கொன்றழித்ததையும் கொன்றழித்த நாட்டுக் கோட்டை‌யை அழித்து அங்கே எள் மற்றும் திவசங்கள் விதைத்ததையும் பாடுவர். மருதனாரோ போரின் கொடுமையையும் போரினால் நாடு பாழாவதையும் பாடுகிறார்.


"நாடெனும்பேர் காடுஆக
ஆசேந்தவழி மாசேப்ப
ஊர் இருந்தவழி பாழ்ஆக"



போரினால் நாடாக இருந்த இடம் காடாகும். பசுக்கள் திரிந்த வழியில் புலிகள் உலவும். ஊர் முழுதும் பாழாகும் என்று சொல்கிறார்.
 

     நாளங்காடி அல்லங்காடி:

சங்க காலத்திலும் மதுரை தூங்கா நகராய் விளங்கியதை மருதனார் மூலம் அறிய முடிகிறது. பகல் நேரக் கடைகளாகிய நாளங்காடி பற்றியும் இரவு நேரத்தில் திறக்கப்படும் அல்லங்காடி (அல் - இரவு; அல்லும் பகலும்) பற்றியும் விளக்குகிறார். கடல் நீர் ஆவியாகி மேகமாவதால் கடல் வற்றிவிடுவதில்லை. ஆறுகள் பல கடலில் வந்து கலப்பதால் கடல் பொங்கி வழிவதுமில்லை. அது போல் மக்கள் திரளாக வந்து பொருட்களை வாங்குவதால் பொருட்கள் தீர்ந்து விடுவதும் இல்லை; பல இடத்திலிருந்தும் வணிகர்கள் விற்பனைக்குப் பொருட்களைக் கொண்டு வருவதால் பொருட்கள் மிகுந்து விடுவதும் இல்லை என்கிறார்.


"மழைகொளக் குறையாது, புனல்புக மிகாது
கரைபொருது இரங்கும் முந்நீர் போல,
கொளக்கொளக் குறையாது. தரத்தர மிகாது"



இத்துட‌ன் ஓர் இரவு முழுதும் மதுரை நகரில் நடக்கும் செயல்கள் யா‌வற்றையும் மருதனார் கூறுகிறார். குலமகளிர் பண்புகள், விலைமகளிர் வேலைகள், கள்வர் திறம், காவலர் மறம் ஆகியவற்றைக் கூறி நிறைவாக மன்னன் இரவில் துயில் கொள்ளல், காலையில் பள்ளியெழுச்சி, அவனது கொடை, அறம் ஆகியவற்றை விளக்கி அவனை வாழ்த்திப் பாடலை நிறைவு செய்கிறார்.


பெரும்பாணாற்றுப்படை:
 

     பா அளவை - 500 அடிகள் கொண்ட ஆசிரியப்பா
 

     பாடியவர் - உருத்திரங்கண்ணனார்
 

     பாட்டுடைத் த‌லைவ‌ன் - தொண்டைமான் இளந்திரையன்

பேரியாழ் வாசிக்கும் பாணனொருவன் வறுமையால் வாடும் இன்னொரு பாணனைத் தொண்டைமான் இளந்திரையன் என்னும் மன்னனிடம் ஆற்றுப்படுத்துவதாக அமைந்தது இந்த ஆற்றுப்படை நூல்.


எட்டுத்தொகை நூல்கள்

எட்டுத்தொகை நூல்கள்:
  1. ஐங்குறுநூறு (500 பாடல்கள், 5 புலவர்கள்)
  2. குறுந்தொகை (401 பாடல்கள், 205 புலவர்கள்)
  3. நற்றிணை (400 பாடல்கள், 175 புலவர்கள்)
  4. அகநானூறு (400 பாடல்கள், பலர்)
  5. புறநானூறு (400 பாடல்கள், பலர்)
  6. கலித்தொகை (150 பாடல்கள், ஐவர்)
  7. பதிற்றுப்பத்து (80 பாடல்கள், 10 புலவர்கள்)
  8. பரிபாடல் (22 புலவர்கள்)
1. ஐங்குறுநூறு:

ஐங்குறுநூறு பாடல்கள் மொத்தம் 500, இவற்றுள் மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை என்னும் ஐந்து நிலம் சார்ந்த திணை ஒவ்வொன்றிற்கும் நூறு பாடல்கள் வீதம் இந் நூலில் ஐந்நூறு அகத்திணைப் பாடல்கள் உள்ளன.

ஐங்குறுநூற்றில் அடங்கியுள்ள பாடல்களில் ஒவ்வொரு திணையைச் சேர்ந்த பாடல்களும் ஐந்து வெவ்வேறு புலவர்களால் இயற்றப்படுள்ளன. இவற்றைத் தொகுக்க உதவும் பாடலும், பிரிவுகளும்:

   " மருதமோ ரம்போகி நெய்தலம் மூவன்
    கருதும் குறிஞ்சி கபிலர் - கருதிய
    பாலையோத லாந்தை பனிமுல்லை பேயனே
    நூலையோ தைங்குறு நூறு"

  • மருதத் திணைப் பாடல்கள் (100) - ஓரம்போகியார்
  • நெய்தல் திணைப் பாடல்கள் (100) - அம்மூவனார் 
  • குறிஞ்சித் திணைப் பாடல்கள் (100) - கபிலர்
  • பாலைத் திணைப் பாடல்கள் (100) - ஓதலாந்தையார் 
  • முல்லைத் திணைப் பாடல்கள் (100) - பேயனார்

2. குறுந்தொகை:

மொத்தமுள்ள 401 பாடல்களில் 391 பாடல்களை 205 புலவர்கள் பாடியுள்ளனர். ஏனைய 10 பாடல் களைப் பாடியவர்கள் பற்றிய தகவல்கள் கிடைக்கப் பெறவில்லை. கடவுள் வாழ்த்து பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்.

எளிய சொல்லாட்சியும் குறைந்த அடிகளும் உடையது. இவை 4 முதல் 8 அடிகள் கொண்ட பாடல்களின் தொகுப்பாக இருப்பதால் இது குறுந்தொகை எனப் பெயர் பெற்றது.  இப்பாடல்களை பூரிக்கோ என்பர் தொகுத்தளித்துள்ளார்.

சங்க இலக்கிய எட்டுத்தொகை நூல்களுள் ”நல்ல குறுந்தொகை” என்று பாராட்டப்பட்ட நூல் குறுந்தொகை. . அகப்பொருளை இனிய காட்சிகளாக்கி விளக்கும் அழகிய இலக்கியம். தமிழரின் பண்பட்ட காதல் வாழ்வைப் பகரும் கவினுறு இலக்கியம்.
 
3. நற்றிணை:


நற்றிணை தனிப்பாடல்களாக பலராலும் பாடப்பட்டு பின்னர் தொகுக்கப்பட்டது. மொத்தம் 400 பாடல்களைக் கொண்டுள்ளதால் இதனை நற்றிணை நானூறு என்றும் கூறுவர். தொகுத்தளித்தவர் பெயர் கிடைக்கப் பெறவில்லை.
  • நற்றிணைப் பாடல்கள் அகப்பொருள் பாடல்களாம். 
  • இவை 9 முதல் 12 அடிகள் கொண்டு 192 (To be confirmed 175) புலவர்களால் பாடப்பெற்றவையாகும்.  
  • இவற்றில் 238 வது பாடல் 8 அடிகளுடனும், ஒரு சில பாடல்கள் ((64, 110, 221, 241, 372, 379, 393) 13 அடிகளுடன் உள்ளன.
  • இதில் உள்ள நானூறு பாடல்களில் 234ஆம் பாடலும் 385ஆம் பாடலின் ஒரு பகுதியும் கிட்டவில்லை.
கடவுள் வாழ்த்து பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்.


4. அகநானூறு:

இது ஓர் அகத்திணை சார்ந்த நூல் என்பதுடன் இதில் 400 பாடல்கள் அடங்கியுள்ளதால் இது அகநானூறு என வழங்கப்படுகிறது.  அகத் த்தொகையுள் நீண்ட பாடல்களைக் கொண்டமையால் இதனை, 'நெடுந்தொகை' என்றும் கூறுவர்.

இதில் அடங்கியுள்ள பாடல்கள் ஒரே புலவராலோ அல்லது ஒரே காலத்திலேயோ இயற்றப்பட்டவை அல்ல. இது பல்வேறு புலவர்கள் வெவ்வேறு காலங்களில் பாடிய பாடல்களின் தொகுப்பு ஆகும். 

  • இந்நூலில் அடங்கியுள்ள பாடல்கள் மிகக் குறைந்த அளவாகப் 13 அடிகளையும், கூடிய அளவு 31 அடிகளையும் கொண்டு அமைந்துள்ளன. 
  • இந்த 400 பாடல்கள் களிற்றியானை நிரை(1-120), மணி மிடை பவளம் (121-300), நித்திலக் கோவை (301-400) என மூன்று பெரும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
இதுவல்லாமல் பாடல்கள் அனைத்தும் தக்கதொரு நியமத்தைக் கொண்டமைந்துள்ளன.
  • ஒற்றைப்பட எண்ணாலான பாடல்கள் 200-ம் பாலைத் திணையைச் சேர்ந்தவை. 
  • இரட்டைப்பட எண்களில் 2,8 எனப்படுபவை 80-ம் குறிஞ்சித் திணையைச் சேர்ந்தவை. 
  • இரட்டைப்பட எண்களில் 4 எனப்படுபவை 40-ம் முல்லைத் திணையைச் சேர்ந்தவை. 
  • இரட்டைபட எண்களில் 6 எனப்படுபவை 40-ம் மருதத் திணையைச் சேர்ந்தவை. 
  • இரட்டைப்பட எண்களில் 10 எனப்படுபவை 40-ம் நெய்தல் திணையைச் சேர்ந்தவை.
இத்தொகையைத் தொகுத்தவர் மதுரை உப்பூரிகுடி கிழார் மகனார் உருத்திரசன்மர். இதனைத் தொகுப்பித்த மன்னன் பாண்டியன் உக்கிரப் பெருவழுதியார்.

     களிற்றியானைநிரை:

  • 1 முதல் 120 வரையில் உள்ள 120 பாடல்கள் இத் தொகுப்பில் உள்ளன. இதில் உள்ள பாடல்கள் யானைக்களிறு போல் பெருமித நடை கொண்டவை. யானைகளின் அணிவகுப்பைப் போன்று ஓரினப் பாடல்களின் அணிவகுப்பாக அவை அமைந்துள்ளன.

     மணிமிடை பவளம்:

  • 121 முதல் 300 வரை உள்ள 180 பாடல்கள் இத் தொகுப்பில் உள்ளன. இதில் உள்ள பாடல்கள் நீலநிற மணிகள் போலவும், செந்நிறப் பவளம் போலவும் பெருமதிப்பு உடையனவாக அமைந்து ஈரினப் பாடல்களின் தொகுப்பாக அமைந்துள்ளன. மணியும் பவளமும் கோத்த ஆரம் போன்று இத்தொகுப்பு அமைந்துள்ளது.

     நித்திலக் கோவை:

  • 181 முதல் 400 வரை உள்ள 100 பாடல்கள் இத் தொகுப்பில் உள்ளன. இதில் உள்ள பாடல்கள் நித்தில முத்துக்கள் போலப் பெருமதிப்பு கொண்டவையாக அமைந்து ஒரினக் கோவை போல அமைந்துள்ளன. இத்தொகுப்பு முத்தாரம் போல் அமைந்துள்ளது.

5. புறநானூறு:

  • புறநானூறு என்னும் தொகைநூல் நானூறு பாடல்களைக் கொண்ட புறத்திணை சார்ந்த ஒரு சங்கத் தமிழ் நூலாகும்.
  • இந் நூலில் அடங்கியுள்ள பாடல்கள் பல்வேறு புலவர்களால் பல்வேறு காலங்களில் பாடப்பட்டவை. அகவற்பா வகையைச் சேர்ந்த இப்பாடல்கள், 150-க்கும் மேற்பட்ட புலவர்களால் எழுதப்பட்டவை. இவற்றுள் 10 பெண் புலவர்களும் அடங்குவர்.

போராசிரியர் ஜோர்ஜ் எல்.ஹார்ட் என்பவரால் புறநானூறு "The Four Hundred Songs of War and Wisdom: An Anthology of Poems from Classical Tamil, the Purananuru" எனும் தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

6. கலித்தொகை:

  • கலித்தொகை சங்க காலத் தமிழிலக்கியத் தொகுதியான எட்டுத்தொகை நூல்களுள் ஆறாவது நூலாகும். 150 பாடல்கள் கொண்ட இத்தொகுப்பு நூல் பல்வேறு புலவர்களால் இயற்றப் பெற்றது. 
  • இவையனைத்தும் அகப்பொருள் பற்றிய பாடல்களாகும். இவை 12 முதல் 80 அடிகளைக் கொண்ட‌து.

கலித்தொகையை முதலில் பதிப்பித்த (1887) சி.வை. தாமோதரம் பிள்ளையவர்களின் கருத்துப்படி இந்நூல் முழுமையும் இயற்றியவர் – நல்லந்துவனார்.

கலித்தொகை இரு பாடல்களின் உதவியுடன் தொகுக்கப்பட்டுள்ளது.

     பாடல் 1

இன்ன திணையை இன்னார் பாடினார் என்பது:

    "பெருங்கடுங்கோன் பாலை, கபிலன் குறிஞ்சி,
    மருதனிள நாகன் மருதம், - அருஞ்சோழன்
    நல்லுருத்தி ரன்முல்லை, நல்லந் துவன்நெய்தல்
    கலவிவலார் கண்ட கலி"

கலித்தொகை நூலில் உள்ள

  • பாலைத்திணைப் பாடல்களைப் பாடியவன் (பாலை பாடிய) பெருங்கடுங்கோ 
  • குறிஞ்சித்திணைப் பாடல்களைப் பாடியவன் கபிலன்
  • மருதத்திணைப் பாடல்களைப் பாடியவன் மருதன் இளநாகன்
  • முல்லைத்திணைப் பாடல்களைப் பாடியவன் சோழன் நல்லுருத்திரன்
  • நெய்தல் திணைப் பாடல்களைப் பாடியவன் நல்லந்துவன்

இந்தத் தொகைநூலில் திணைகள் வரிசைப்படுத்தி அடுக்கி வைக்கப்பட்டுள்ளதற்கு இந்தப் பாடலே அடிப்படை.

     பாடல் 2


இன்னின்ன திணைக்கு உரிய பொருள் இன்னின என எளிமைப்படுத்தித் தெளிவாக்கும் பாடல்

    "போக்கெல்லாம் பாலை புணர்தல் நறுங்குறிஞ்சி
    ஆக்கமளி ஊடல் அணிமருதம் - நோக்கொன்றி
    இல்லிருத்தல் முல்லை இரங்கியபோக் கோநெய்தல்
    புல்லும் கலிமுறைக் கோப்பு"


இதில் சொல்லப்பட்டவை: தலைவன், தலைவி
பிரிதல் போக்கு - பாலை
புணர்தல் - இனிமை தரும் குறிஞ்சி
இன்பத்துக்கு ஆக்கம் தரும் ஊடல் - அருமையான மருதம்
நோக்கம் ஒன்றுபட்டு தலைவி இல்லத்தில் ஆற்றியிருத்தல் - முல்லை
இரங்கிய போக்கு - நெய்தல்

7. பதிற்றுப்பத்து:

  • பதிற்றுப்பத்து(பத்து + பத்து = பதிற்றுப்பத்து) எட்டுத்தொகை நூல்களுள் புறப்பொருள் பற்றியதாகும். 
  • இது சேர மன்னர்கள் பதின்மரைப் பற்றி பத்துப் புலவர்கள் பத்துப் பத்தாகப் பாடிய பாடல்களின் தொகுப்பே பதிற்றுப் பத்தாகும். சேர மன்னர்களின் கல்வித் திறம், மனத் திண்மை, புகழ் நோக்கு, ஈகைத் திறம் ஆகிய பண்புகளையும் படை வன்மை, போர்த்திறம், குடியோம்பல் முறை ஆகிய ஆட்சித் திறன்களையும் விளக்குகின்றன. 
இந்த நூலில் முதற் பத்தும், இறுதிப் பத்தும் கிடைக்கவில்லை. ஏனைய எட்டுப் பத்துகளே கிடைத்துள்ளன. 
  • முதல் பத்து -
  • இரண்டாம் பத்து - பாடியவர் குமட்டூர்க் கண்ணனார், பாடப்பெற்றவர் - இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
  • மூன்றாம் பத்து - பாடியவர் பாலைக் கௌதமனார், பாடப்பெற்றவர் - இமயவரம்பன் தம்பி பல்யானைச் செல்கெழுகுட்டுவன்
  • நான்காம் பத்து - பாடியவர் காப்பியாற்றுக் காப்பியனார், பாடப்பெற்றவர் - களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல்
  • ஐந்தாம் பத்து - பாடியவர் பரணர், பாடப்பெற்றவர் - கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்
  • ஆறாம் பத்து - பாடியவர் காக்கைபாடினியார் (நச்செள்ளையார்), பாடப்பெற்றவர் - ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்
  • ஏழாம் பத்து - பாடியவர் கபிலர்,பாடப்பெற்றவர் -    செல்வக் கடுங்கோ வாழியாதன்
  • எட்டாம் பத்து - பாடியவர் அரிசில், கிழார் - தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை
  • ஒன்பதாம் பத்து - பாடியவர் பெருங்குன்றூர்க் கிழார்,  பாடப்பெற்றவர் - குடக்கோ இளஞ்சேரலிரும்பொறை  
  • பத்தாம் பத்து     
8. பரிபாடல்:
இதில் மொத்தமுள்ள பாடல்கள் 70, ஏனைய பாடல்கள் முழுமையாகக் கிடைக்கப் பெறவில்லை.

பரிபாடல் பின்வரும் பாடலின் துணைகொண்டு தொகுக்கப்பட்டுள்ளது:

    "திருமாற் கிருநான்கு செவ்வேட்கு முப்பத்
    தொருபாட்டுக் காடுகாட் கொன்று - மருவினிய
    வையையிரு பத்தாறு மாமதுரை நான்கென்ப
    செய்யபரி பாடற் றிறம்"


  • திருமாலுக்கு - 8 பாடல் 
  • செவ்வேளுக்கு (முருகனுக்கு) - 31 பாடல்
  • காடுகாள் (காட்டில் இருக்கும் கொற்றவைக்கு) - 1 பாடல் 
  • படிப்பதற்கு இனிமையுள்ள வையைக்கு - 26 பாடல்
  • பெருநகரமாகிய மதுரைக்கு - 4 பாடல் 
Ref: 
  1. wikipedia
  2. http://learnsangamtamil.wordpress.com

Friday, March 04, 2011

சங்க இலக்கியங்களில் கூறப்படும் திணை பற்றிய குறிப்புகள் (ஐந்திணை, ஐந்நிலம், ஐந்து ஒழுக்கங்கள்)


     தமிழில் திணை என்னும் சொல் பிரிவு என்னும் பொருளைத் தரும். திணிவைப் பிரித்துக் காட்டுவது திணை.

தொல்காப்பியத்தில் குறிப்பிட்டுள்ள படி,

  • மொழியியல் திணைகள், உயர்திணை மற்றும் அஃறிணைகளாகப் பிரிக்கப்படுகின்றன.
  • பொருளியல் திணைகள், அகத்திணை மற்றும் புறத்திணைகளாகப் பிரிக்கப்படுகின்றன.

பழந்தமிழ் இலக்கியங்கள் அகத்திணை, புறத்திணை எனும் இரு வகைகளுக்குள் அடங்குகின்றன.

      திணை என்றால் ஒழுக்கம் என்று பொருள். பாட்டுக்கு உரிய தலைவர்களின் ஒழுக்கத்தை பாடல் பொருளாக பாடுவதை திணை என்றார்கள். 


புறத்திணை - அகத்திணை:
 
புறத்திணை - பழந் தமிழர் வாழ்வியலில் போர், அரசியல் முதலியவை தொடர்பான வாழ்வு புற வாழ்வு எனப்படுகின்றது. மேற்படி புற வாழ்வு தொடர்பான ஒழுக்கம் புறத்திணை என வழங்கப்படுகின்றது

அகத்திணை - ஓர் ஆணும், பெண்ணும் காதலால் இணைந்து தமக்குள்ளே இன்பம் துய்த்து வாழ்தல் அக வாழ்வு ஆகும். இவ்வாறு அவர்கள் தமது உள்ளத்துள், அதாவது அகத்துள், நுகரும் உணர்வுகள் குறித்தவற்றையே பழந்தமிழ் இலக்கியங்கள் அகத்திணை என்கின்றன.


ஐந்நிலம்


பண்டைத்தமிழகத்தில் நிலப்பரப்புகள் 5 பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன.  

     குறிஞ்சி - மலையும் மலை சார்ந்த நிலமும்


     முல்லை - காடும் காடு சார்ந்த நிலமும்
 

     மருதம் - வயலும் வயல் சார்ந்த நிலமும்
 

     நெய்தல் - கடலும் கடல் சார்ந்த நிலமும்
 

     பாலை - முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து வெம்மையுற்ற‌ நிலம்

ஐந்து ஒழுக்கங்கள்:

     குறிஞ்சி - புணர்தலும் புணர்தல் நிமித்தமும் (கூடல்)


     முல்லை - இருத்தலும் இருத்தல் நிமித்தமும் (காத்து இருத்தல்)
 

     மருதம் - ஊடலும் ஊடல் நிமித்தமும்
 

     நெய்தல் - இரங்கலும் இரங்கல் நிமித்தமும் ( வருந்துதல்) 

     பாலை - பிரிதலும் பிரிதல் நிமித்தமும்

ஐந்திணை:

     வகைப்படுத்தப்பட்ட நிலம் 5, வகைப்படுத்தப்பட்ட ஒழுக்கம் 5, - ஆகியவற்றின் திணிவுகளை ஐந்திணை என்கிறோம்.

அகத்திணைப் பிரிவுகள்:

  1. குறிஞ்சித் திணை
  2. முல்லைத் திணை
  3. மருதத் திணை
  4. நெய்தல் திணை
  5. பாலைத் திணை
  6. பெருந்திணை
  7. கைக்கிளைத் திணை
   இவற்றுள் கைக்கிளை மற்றும் பெருந்திணை முறையே ஒருதலைக் காமத்தையும், பொருந்தாக் காமத்தையும் குறிக்கின்றன. இதனால் இவை தமிழர் வாழ்வியலில் பெருமைக்கு உரியனவாகக் கருதப்படுவது இல்லை.

      ஏனைய ஐந்தும், நிலத்திணைகளுடன் இணைத்துப் பெயர் இடப்பட்டிருப்பதைக் காணலாம். அகவாழ்வின் அம்சங்களாகத் தமிழ் இலக்கியங்கள் காணும் புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் என்பவை ஒவ்வொன்றும் ஐவகை நிலத்திணைகளில் ஒவ்வொன்றுக்குச் சிறப்பானவையாகக் கொண்டு இலக்கியம் செய்யப்படுதல் அக்கால வழக்கம்.

குறிஞ்சித்திணை:


  • குறிஞ்சியாவது, 'மலையும் மலைசார்ந்த இடங்களும்', இயற்கை அழகும், வளங்களும் நிறைந்தனவாக, இளம் பருவத்தாரிடையே 'புணர்தலும் புணர்தல் நிமித்தமும்' செல்லவும், இவைபற்றி எல்லாம் நினைக்கவும், அணுக்கரிடையே (தமக்கு நெருக்கமானவர்) தம் உணர்வை எடுத்து கூறவும் பொருந்துவனவாக அமைந்திருக்கும் நிலப்பகுதிகள். 
  • எனவே, தனித்து வேட்டை மேல் செல்லும் இளைஞனும், புனம் காத்து நிற்கும் கன்னியும் ஒருவரை ஒருவர் கண்டு காதலுற்று ஒன்றுபடுவதற்கு ஏற்ற நிலைக்களமாகி, இந்த துணிவு நிகழ்வதற்கு ஏற்ற வாழ்வியல் அமைந்தது குறிஞ்சி ஆகும்
  • குறிஞ்சித்திணைக்கு கூதிர்காலம் மற்றும் முன்பனி காலம் பெரும்பொழுதுகளாகவும் யாமம் சிறுபொழுதாகவும் அமையும்.
  • குறிஞ்சித்திணைக்கு உரித்தான துறையாக ஒரு எடுத்து காட்டு: "பகற்குறிக்கண் செறிப்பு அறிவுறீத் தோழி வரைவு கடாயது"

முல்லைத்திணை:

  • முல்லை என்பது காடும் காடு சார்ந்த நிலங்களும் ஆகும். இந்நிலத்து ஆயர்களது வாழ்வியல், ஆடவர் ஆனிரை (பசுக்கள்) மேய்த்தற்கு பகற்பொழுது எல்லாம் காட்டிடத்தே இருத்தல், மகளிர் பால், பயன்களை விற்று வருதல் போன்ற ஒழுக்கத்தோடு ஒட்டியதாகும். 
  •  ஏறு தழுவி வெல்பவனுக்கே மகளைத் தரும் வழக்கமும், அவனையே விரும்பி ஏற்கும் கன்னியர் மனமும் இத்திணையின் சிறப்பான மரபுகள். இதனால் காத்திருத்தல் தன்மை இயல்பாக, 'இருத்தல், இருத்தல் நிமித்தம்' முல்லைத்திணைக்கு உரிமையாக்கி உள்ளனர்.
  • முல்லைத்திணைக்கு கார் காலம் பெரும்பொழுதாகவும் மாலை சிறுபொழுதாகவும் அமையும்
  • முல்லைத்திணைக்கு உரித்தான துறையாக ஒரு எடுத்து காட்டு: "வினைமுடிந்து மீளூம் தலைவன் தேர்ப்பாகற்கு சொல்லியது"

மருதத்திணை:

  • மருதம் என்பது வயலும் வயல் சார்ந்த நிலமும். இவை வளமான செந்நெல் விளையும் பகுதி என்பதால், இங்கே உழுவித்து உண்ணும் பெரும் செல்வர் வாழ்வது இயல்பு. இவர்கள் தம் வளமையால் காமத்தில் எளியராகி பரத்தமை மேற்கொள்ளுதல் நிகழ்வதாகும். 

  • இதனால் தலைவியர்க்கு 'ஊடலும் ஊடல் நிமித்தமும்' ஆக எழும் பேச்சுக்களும் இயல்பாகும். இது குறித்தே ஊடலும் ஊடல் நிமித்தமும் மருதத்திணைக்கு உரித்தாக்கினார்கள். 

  • மருதத்திணைக்கு ஆறு பருவங்களும் பெரும்பொழுதாகவும் விடியல் சிறுபொழுதாகவும் அமையும்.
  • மருதத்திணைக்கு உரித்தான துறையாக ஒரு எடுத்து காட்டு: "பரத்தையின் பிரிந்து வந்த தலைமகனுக்கு கிழத்தி சொல்லியது"

நெய்தல்திணை:

  • கடலும் கடல் சார்ந்த பகுதிகள் நெய்தலுக்கு நிலமாகும். மீன் வளம் நாடி கடலிலே திமில் ஏறி செலவது பெரும்பாலும் ஆடவர் தொழில் ஆதலின் அவர் குறித்த பொழுதில் திரும்பாத போது 'இரங்கலும் இரங்கல் நிமித்தமும்' ஆக எழும் பேச்சும் இந்நிலத்துக்கு இயல்பாயின. 

  • நெய்தல் திணைக்கு ஆறு பருவங்களும் பெரும்பொழுதாகவும் எற்பாடு (பிற்பகல்) சிறுபொழுதாகவும் அமையும்.
  • நெய்தல்திணைக்கு உரித்தான துறையாக ஒரு எடுத்து காட்டு: "பகற்குறிக்கண் வந்த தலைவன் சிறைப்புறத்தான் ஆக தோழி தலைமகளுக்கு சொல்லுவாளாய் தலைமகனுக்கு சொல்லியது"

பாலைத்திணை:

  • பாலைக்கு என்று தனி நிலம் இல்லை. ஆனால் முல்லயும் குறிஞ்சியும் முறை முறை திரிந்து கதிரவன் வெம்மையாலே எங்கும் வளமை தீய்ந்து போயுள்ள இடங்களே பாலை என்பது ஆகும். இதனால், காதலர் இடையே 'பிரிவும், பிரிதல் நிமித்தமும்' ஆக ஏற்படும் பெரும் துயரத்தையும் பாலைக்கு உரிமை படுத்தினர். 

  • ஆறலை கள்வரும், கொலையும் துன்பமும் வெம்மையும் இந்நிலத்துக்கு உரிய தன்மைகள். 

  • பாலைத்திணைக்கு வேனில் காலம், மற்றும் பின்பனி காலம் பெரும்பொழுதுகளாகவும், நண்பகல் சிறுபொழுதாகவும் அமையும்.
  • பாலைத்திணைக்கு உரித்தான துறையாக ஒரு எடுத்து காட்டு: "பொருள்வயின் பிரிவு கடைக்கூடிய தலைவன் நெஞ்சுக்கு சொல்லியது"
இதனால் பாடல்களில் எந்த பாடுபொருள் எடுத்தாளப்படுகிறதோ அதனோடு இணைந்த நிலப் பெயர் கொண்ட திணைப் பிரிவுள் அப்பாடல் அடங்கும்.

புறத்திணைப் பிரிவுகள்:

  1. வெட்சித் திணை
  2. வஞ்சித் திணை
  3. உழிஞைத் திணை
  4. தும்பைத் திணை
  5. வாகைத் திணை
  6. காஞ்சித் திணை
  7. பாடாண் திணை

புறத்திணைகளின் செய்திகளை கூறும் இந்தப் பழம்பாடல்:

      "வெட்சி நிரை கவர்தல்; மீட்டல் கரந்தையாம்
      வட்கார் மேல் செல்வது வஞ்சி ; உட்காது
      எதிர்ஊன்றல் காஞ்சி ; எயில்காத்தல் நொச்சி
      அது வளைத்தல் ஆகும் உழிஞை - அதிரப்
      பொருவது தும்பையாம் ; போர்க்களத்து மிக்கோர்
      செரு வென்றது வாகையாம்"


வெட்சித் திணை:

  • ஒரு நாட்டின் மீது போர் தொடுக்க விரும்பும் ஒரு மன்னன் அந் நாட்டு எல்லையூடு புகுந்து ஆநிரைகளைக் (பசுக் கூட்டம்) கவர்ந்து செல்வதையும். அவ்வாறு களவாடிச் செல்லப்படும் ஆநிரைகளை மீட்டு வருவதையும் கருப்பொருளாகக் கொண்டவை

வஞ்சித் திணை:

  • மன்னனொருவன் வேற்று நாட்டின் மீது படை நடத்திச் செல்வது, அதனைப் பகை அரசன் எதிர்ப்பது ஆகிய செய்திகளைக் கூறுவது.

உழிஞைத் திணை:


  • படை நடத்திச் செல்லும் அரசன் வேற்று நாட்டுக் கோட்டையை முற்றுகை இடுவதையும், அக் கோட்டையைப் பாதுகாத்து நிற்கும் பகை அரசன் நடவடிக்கைகளையும் பற்றிக் கூறுவது.
 
தும்பைத் திணை:

  • படையெடுத்து வந்த வேற்று நாட்டு அரசனுடன் போர் செய்து அவனை வெல்வது பற்றிக் கூறுவது.

வாகைத் திணை:


  • மன்னனுடைய வெற்றி பற்றிய செய்திகளைக் கூறுவது

காஞ்சித் திணை:


  • உலகத்தின் நிலையாமை தொடர்பான கருப்பொருள் கொண்டவை 

பாடாண் திணை:

  • பாடல் தலைவனின் நல்லியல்புகள் பற்றிக் கூறுவது 

சங்க இலக்கியங்கள் பற்றிய குறிப்புகள்


     இவ்வலைப்பதிவில் எட்டுத்தொகை நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள 'சங்கங்கள்' பற்றிய சான்றுகளையும், எட்டுத்தொகை நூல்களைப் பற்றியும் காணலாம்.


"தமிழ்ச்சங்கம்" பற்றிய இலக்கியச் சான்றுகள்:

மதுரையில் புலவர்கள் கூடி தமிழாய்ந்த நிலையினைப் பத்துப்பாட்டு – எட்டுத்தொகைகளில் வரும் குறிப்புகள் மூலம்  தெரிந்து கொள்ள முடிகிறது.
 
          "தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின்
           மகிழ்நனை மருகின் மதுரை"   (சிறுபா 84 – 762)

          "தொல்லாணை நல்லாசிரியர்
          புணர் கூட்டு உண்ட புகழ்சால் சிறப்பின்"  (மதுரை 761- 762)


பொதுவாக சங்க இலக்கியப் பாடல்கள் அகம், புறம் எனும் இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது.

     அக‌ம் - அக‌ப்பொருள் பற்றியது (குடும்பம், அன்பு, காதல், தலைவன், தலைவி)

    புறம் - புறப்பொருள் ப‌ற்றிய‌து (மக்கள் வாழ்க்கை முறை, போர், வணிக‌ம், அர‌சாட்சி, நன்னெறி, புலவர்கள்)

எட்டுத்தொகை நூல்கள்:

     எட்டுத்தொகை அல்லது தொகை நூல்கள் என்பவை சங்க இலக்கியத்தில் பலராலும் பல காலகட்டங்களில் எழுதப்பட்டுப் பின்னர் ஒருசேர தொகுக்கப்பட்டவை. இவற்றில் பல பாடல்களில் அவற்றை எழுதியவரது பெயர் காணப்படவில்லை.  


எட்டுத்தொகை நூல்களைப் பற்றிய வெண்பா பின்வருவது:
 
"நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல் கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்று இத்திறத்த எட்டுத் தொகை"

    மொத்தமுள்ள 8 நூல்களில் 5 நூல்கள் அகப்பொருள் பற்றியது, 2 நூல்கள் புறப்பொருள் பற்றியது.

   அகப்பொருள் பற்றியவை: நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு. 

    புறப்பொருள் பற்றியவை: புறநானூறு, பதிற்றுப்பத்து

பரிபாடல் நூலிலுல்ள பாடல்கள் அகம், புறம் என இரண்டையும் கொண்டது.

Thursday, March 03, 2011

தமிழ் இலக்கியம், தமிழ்மொழியின் வரலாறு - 2

தொட‌ர்ச்சி....

சங்க இலக்கியம் (கிமு 300 - கிபி 300):
  • தமிழில் கிறிஸ்துக்கு முற்பட்ட காலப்பகுதியில் எழுதப்பட்ட செவ்வியல் இலக்கியங்கள் சங்க இலக்கியங்களாகக் கருதப்படுகிறது.
  • சங்க இலக்கியம் 473 புலவர்களால் எழுதப்பட்ட 2381 பாடல்களைக் கொண்டுள்ளது. 
  • இவற்றுள் 30 பேர் பெண் புலவர்களாவார்கள்
  • 102 பாடல்களுக்கு இயற்றியவரது பெயர் அறியப்படவில்லை
  • சங்க இலக்கியங்கங்களிலிருந்து பண்டைத்தமிழரது தினசரி வாழ்க்கை நிலைமைகளையும், காதல், போர், வீரம், ஆட்சியமைப்பு, வணிகம் போன்றவற்றை அறிய முடிகிறது.
     இன்று கிடைக்கக்கூடிய மிகப் பழைய ஆக்கம் தொல்காப்பியம் ஆகும். இது பண்டைக்காலத் தமிழின் இலக்கணத்தை விளக்கும் ஒரு இலக்கிய வடிவ நூலாகும். இதன் சில பகுதிகள் கிமு 200 அளவில் எழுதப்பட்டதாகக் கருதப்படுகின்றது. 2005ல் அகழ்ந்தெடுக்கப்பட்ட சான்றுகள், தமிழ் எழுத்து மொழியை கிமு 500 அளவுக்கு முன் தள்ளியுள்ளன.

     19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ் அறிஞர்களான சி. வை. தாமோதரம்பிள்ளை, உ. வே. சாமிநாதையர் ஆகியோரது முயற்சியினால் சங்க இலக்கியங்கள் அச்சுருப் பெற்றன. 

     சங்க இலக்கியங்களை எட்டுத்தொகை நூல்கள், பத்துப்பாட்டு நூல்கள், பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எனப் பெரும்பிரிவுகளாகத் தொகுத்தடக்கப்பட்டுள்ளன.

அச்சியந்திரங்களின் வருகையால் ஏடுகளில் மட்டும் இருந்த தமிழ் இலக்கியங்கள் உ.வே.சாமிநாதையர், ஆறுமுக நாவலர், சி. வை. தாமோதரம்பிள்ளை போன்றோரின் மீள் கண்டுபிடிப்பாலும்,அயராத உழைப்பாலும் அச்சாக வெளிவந்தது.

பதினெண்மேற்கணக்கு நூல்கள்:  முறையே தொகையும், பாட்டும் இணைந்து பதினெண்மேற்கணக்கு நூல்களாகக் கூறப்படுகின்றன.

எட்டுத்தொகை நூல்கள்: 

  1. ஐங்குறுநூறு (500 பாடல்கள், 5 புலவர்கள்)
  2. குறுந்தொகை (401 பாடல்கள், 205 புலவர்கள்)
  3. நற்றிணை (400 பாடல்கள், 175 புலவர்கள்)
  4. அகநானூறு (400 பாடல்கள், பலர்)
  5. கலித்தொகை (150 பாடல்கள், ஐவர்)
  6. புறநானூறு (400 பாடல்கள், பலர்)
  7. பதிற்றுப்பத்து (80 பாடல்கள், 10 புலவர்கள்)
  8. பரிபாடல் (22 புலவர்கள்)

பத்துப்பாட்டு நூல்கள்:


  1. திருமுருகாற்றுப்படை (நக்கீரனார்)
  2. பொருநராற்றுப்படை (மூடத்தாமக்கண்ணியார்)
  3. சிறுபாணாற்றுப்படை (நத்தத்தனார்)
  4. பெரும்பாணாற்றுப்படை (கடியலூர் உருத்திரங் கண்ணனார்)
  5. முல்லைப்பாட்டு (நப்பூதனார்)
  6. மதுரைக் காஞ்சி (மாங்குடி மருதனார்)
  7. நெடுநல்வாடை (நக்கீரனார்)
  8. குறிஞ்சிப் பாட்டு (கபிலர்)
  9. பட்டினப் பாலை (கடியலூர் உருத்திரங்கண்ணனார்)
  10. மலைபடுகடாம் (பெருங் கெளசிகனார்)

பதினெண் கீழ்க்கணக்கு நூல்க‌ள்:

    1. திருக்குறள் (திருவள்ளுவர்)
    2. நாலடியார் (சமண முனிவர்கள்)
    3. நான்மணிக்கடிகை (விளம்பி நாகனார்)
    4. இனியவை நாற்பது (பூதஞ் சேந்தனார்)
    5. இன்னா நாற்பது (கபிலர்)
    6. கார் நாற்பது (மதுரைக் கண்ணங்கூத்தனார்)
    7. களவழி நாற்பது (பொய்கையார்)
    8. திணைமொழி ஐம்பது (கண்ணன்சேந்தனார்)
    9. திணைமாலை நூற்றைம்பது (கணிமேதாவியார்)
    10. ஐந்திணை ஐம்பது (மாறன் பொறையனார்)
    11. ஐந்திணை எழுபது (மூவாதியார்)
    12. திரிகடுகம் (நல்லாதனார்)
    13. ஆசாரக்கோவை (பெருவாயில் முள்ளியார்)
    14. பழமொழி நானூறு (மூன்றுறை அரையனார்)
    15. சிறுபஞ்சமூலம் (காரியாசான்)
    16. முதுமொழிக்காஞ்சி (மதுரைக் கூடலூர் கிழார்)
    17. ஏலாதி (கணிமேதாவியார்)
    18. இன்னிலை (பொய்கையார்); கைந்நிலை
     
                                                                                    (தொடரும்)

Ref:
  1. மு. வரதராசன். (2004). தமிழ் இலக்கிய வரலாறு. புது தில்லி: சாகித்திய அகாதெமி.

Wednesday, March 02, 2011

தமிழ் இலக்கியம், தமிழ்மொழியின் வரலாறு - 1

செந்தமிழ்ச் செம்மொழியின் வரலாறு:

   நமது செந்தமிழ்ச் செம்மொழி இந்தியாவில் முதலில் தோன்றிய இரு முக்கிய மொழிகளில் ஒன்றாகக்  கருதப்படுகிறது. தெலுங்கு, கன்னடம், ம‌லையாள‌ம் ம‌ற்றும் துளு போன்ற தென்னிந்திய மொழிகள் தமிழ்மொழியிலிருந்தே தோன்றியவையாகும். அதன் பின்னர் இம்மொழிகள் தொடர்ச்சியாக‌ வளர்ச்சியடைந்து, தற்போது சமஸ்கிருத இல‌க்க‌ண‌த்தைத் தழுவி வழங்கப்படுகிறது.


    1996-ம் ஆண்டு புள்ளி விவரப்படி உலகம் முழுவதிலும் 8 கோடி 50 லட்சம் (85மில்லியன்) மக்களால் பேசப்பட்டு, ஒரு மொழியை, தாய்மொழியாகக் கொண்டு பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்ட மொழிகளின் பட்டியலில், தமிழ், பதினெட்டாவது இடத்தில் உள்ளது.

மூன்று தமிழ்ச்சங்கங்கள்:

  1. முதற்சங்கம்

  2. இடைச்சங்கம்

  3. கடைச்சங்கம்

     தொல்பழங்காலத்தில், அக்காலப் பாண்டிய அரசர்களின் ஆதரவில், ஒன்றுக்குப்பின் ஒன்றாக மூன்று தமிழ்ச்சங்கங்கள் தமிழாராய்ந்ததாகவும், அக்காலத்தில் தமிழிலக்கியங்கள் பல இயற்றப்பட்டதாகவும் நம்பப்படுகிறது.  இம் முச்சங்கங்கள் சார்ந்த இலக்கியங்களிலே கடைச்சங்க நூல்கள் மட்டுமே தற்போது கிடைத்துள்ளது.

     முன்னிரண்டு சங்கங்களையும் சேர்ந்த நூல்கள், அக்காலங்களில் ஏற்பட்ட கடல்கோள்களின்போது, நாட்டின் பெரும்பகுதியுடன் சேர்ந்து அழிந்து போனதாம். எனினும், முதலிரு சங்கங்கள் இருந்தது பற்றியோ அல்லது அக்காலத்தில் இலக்கியங்கள் இருந்தது பற்றியோ போதிய உறுதியான ஆதாரங்கள் எதுவுமில்லை.

     நக்கீரர் என்னும் புலவரே தானெழுதிய இறையனார் அகப்பொருள் உரை நூலில் இச்சங்கங்கள் பற்றி விபரித்துள்ளார். ஒவ்வொரு சங்கமும் இருந்த காலமும், அச்சங்கங்களில் இருந்த புலவர்களின் எண்ணிக்கைகளையும் இவர் கொடுத்துள்ளார். இதன்படி:
  • முதற்சங்கம் 4440 ஆண்டுகள் நிலைத்திருந்ததாகவும், 4449 புலவர்கள் இருந்து தமிழாய்ந்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது.
  • இடைச்சங்கம் 3700 புலவர்களுடன் 3700 ஆண்டுகள் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
  • கடைச்சங்கம் 1850 ஆண்டுகள் இருந்து, 449 புலவர்களுக்கு இடமளித்துள்ளதாம்.
இதன்படி மூன்று சங்கங்களினதும் மொத்தக் காலம் 9990 ஆண்டுகளாவதுடன், முதற்சங்கத்தின் தொடக்கம் அண்னளவாக 12000 வருடத்துக்கு முன் செல்கிறது. தற்போதுள்ள சான்றுகளின்படி, மேற்படி காலக்கணக்கு நிறுவப்பட முடியாத ஒன்றாகும்.

மேற்கூறிய சங்கங்கள் இருந்தது பற்றியே சில ஆய்வாளர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். எனினும், கிறீஸ்து சகாப்தத்துக்குச் சற்று முன்பின்னாகத் தமிழ்ச் சங்கம் ஒன்று இருந்திருக்கக் கூடும் என்று பலர் கருதுகிறார்கள். புறநானூறு, அகநானூறு போன்ற தொகை நூல்கள், சங்ககாலம் என்று குறிக்கப்படும் மேற்படி காலத்தில் இயற்றப்பட்டது என்பது பெரும்பான்மைத் துணிபு.

     தமிழ் இலக்கியத்தையும், தமிழ் மொழியின் வரலாற்றையும் ஐந்து காலப்பகுதிகளாக வகைப்படுத்தலாம்.

    * சங்க காலம் (கிமு 300 - கிபி 300)

    * சங்கம் மருவிய காலம் (கிபி 300 - கிபி 700)

    * பக்தி இலக்கிய காலம் (கிபி 700 - கிபி 1200)

    * மத்திய காலம் (கிபி 1200 - கிபி 1800)

    * இக்காலம் (கிபி 1800 - இன்று வரை)


                                                                                         (தொடரும்)


Ref:
  1. Wikipedia
  2. Gems from the Treasure House of Tamil Literature by The Tamil Writers Association

Tuesday, March 01, 2011

முதல்பதிவு


தமிழ்த்தாய் வாழ்த்து


நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்

சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்

தெக்கணமும்  அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்

தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே!

அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற

எத்திசையும் புகழ் மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!


                                                                             தமிழணங்கே!

உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!
                                                                               
                                                               வாழ்த்துதுமே!
                                        
                                                                 வாழ்த்துதுமே!



                                                               - மனோன்மணியம் பெ. சுந்தரம்பிள்ளை





      நான் சமீப காலமாக‌ சங்க இலக்கியங்கள் மற்றும் அவற்றின் வரலாற்றைப் பற்றிய குறிப்புகளை இணையதளத்தில் சேகரித்துக் கொண்டிருக்கிறேன். தொடரும் நாட்களில் சேகரிக்கப்பட்ட குறிப்புகளை ஆராய்ந்து, அதன்பின் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இச்சேகரிப்பின் முக்கிய நோக்கம் இணையதளங்களிலும், ஏனைய பிற வடிவிலும் பரவலாகச் சிதறிக் கிடக்கும் தமிழ் இலக்கியக் கட்டுரைகளை ஒருங்கிணைத்து, தமிழ் இலக்கிய வரலாற்றில் ஆர்வமுள்ள இணையதமிழ் வாசகர்கள் பயனடையும் வகையில் இவ்வலைபக்கத்தில் பகிர்வதே!