Saturday, March 05, 2011

ப‌த்துப்பாட்டு நூல்கள்

ப‌த்துப்பாட்டு நூல்கள்:

சங்க இலக்கியங்களுள் ஒன்றான‌ ப‌த்துப்பாட்டு நூல்களிலுள்ள‌ பாட‌ல்க‌ள் 103 முத‌ல் 782 அடிக‌ளைக் கொண்ட‌ நீள‌மான பாட‌ல்க‌ள். இப்பாடல்களில் குறிஞ்சிப்பாட்டு மட்டும் அகப்பொருள் பற்றிய பாடல்களையும், ஏனைய பிற பாடல்கள் அக‌ம் அல்ல‌து புற‌ம் எனும் குறிப்பிட்ட வ‌கைப்பாட்டிற்குள் சரியாகப் பிரிக்க‌முடியாத‌ப‌டி உள்ள‌ன.


திருமுருகாற்றுப்படை:
  
     பா அளவை - 317 அடிகள் கொண்ட ஆசிரியப்பா

     பாடியவர் - நக்கீரர்
 

     பாட்டுடைத் த‌லைவ‌ன் - முருகக் கடவுள் திருமுருகாற்றுப்படை:


இது பத்துப்பாட்டு நூல்களுள் முதலில் வைத்து எண்ணப்படுகிற‌து. "ஆற்றுப்படுத்தல்" என்னும் சொல் வழிப்படுத்தல் என்னும் பொருள்படும். திருமுருகாற்றுப்படை ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியும் முருகப் பெருமானின் அறுபடைவீடுகள் ஒவ்வொன்றையும் பாராட்டுவனவாக அமைந்துள்ளது.


மலைப்படுக்கடாம்:


     பா அளவை - 583 அடிகள் கொண்ட ஆசிரியப்பா

     பாடியவர் -  பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்

     பாட்டுடைத் த‌லைவ‌ன் - நன்ன‌ன் வெண்மான் 


இந்நூல் பத்துப்பாட்டு நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் ஆகும். இந்நூற் பாடல்களில், அக்காலத் தமிழரின் இசைக்கருவிகள் பற்றியும் ஆங்காங்கே குறிப்புக்கள் காணப்படுகின்றன. நன்னனைப் பாடிப் பரிசு பெறச்செல்லும் பாணர் நெடுவங்கியம், மத்தளம், கிணை, சிறுபறை, கஞ்சதாளம், குழல், யாழ் போன்ற பலவகை இசைக் கருவிகளை எடுத்துச் செல்வது பற்றிய செய்திகள் கூறப்பட்டுள்ளன.


முல்லைப்பாட்டு:


     பா அளவை - 103 அடிகள் கொண்ட‌ ஆசிரியப்பா
    
     பாடியவர் - நப்பூதனார்
    
     பாட்டுடைத் த‌லைவ‌ன் - த‌லையான்கால‌த்து செருவென்ற‌ நெடுஞ்செழிய‌ன்  

இந்நூல் இத்தொகுதியுள் அடங்கியுள்ள மிகச்சிறிய நூலாகும். இது முல்லைத் திணைக்குரிய நூல், அகப்பொருள் பற்றியது. மழைக்காலத்துக்குமுன் திரும்பிவருவதாகச் சொல்லிப் போருக்குச் சென்ற தலைவன் குறித்த காலத்தில் வரவில்லை. தலைவியோ பிரிவுத் துயரம் தாழாமல் உடல் மெலிந்து வாடுகிறாள். விபரமறியச் சென்று வந்த தோழியரின் உற்சாக வார்த்தைகள் அவள் ஏக்கத்தைக் குறைக்கவில்லை. போரில் வெற்றி பெற்றுத் தலைவன் திரும்பியதும் தான் தலைவி ஆறுதலடைந்து இன்பமுறுகிறாள்.


மழைக்காலம் வருவதை உணர்த்தும் முல்லைப்பாட்டின் முதற்பாடல்:


 "நனந்தலை யுலகம் வளைஇ நேமியொடு
 வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை
 நீர்செல நிமிர்ந்த மாஅல் போலப்
 பாடிமிழ் பனிக்கடல் பருகி வலனேர்பு
 கோடுகொண் டெழுந்த கொடுஞ்செலவு எழிலி"


நெடுநல்வாடை:


     பா அளவை - 188 அடிகள் கொண்ட‌ அகவற்பா

     பாடியவர் - நக்கீரனார்

நூலில் எடுத்தாளப்பட்டுள்ள நிகழ்வுகள் வாடைக்காலத்தில் நிகழ்வதாலும், தலைவனைப் பிரிந்து வாடும் தலைவிக்கு இது நீண்ட வாடையாகவும், போர் வெற்றியைப் பெற்ற தலைவனுக்கு இது ஒரு நல்ல வாடையாகவும் அமைந்தது குறித்தே இது நீண்ட நல்ல வாடை என்னும் பொருளில் நெடுநல்வாடை எனப் பெயர் பெற்றதாகக் கூறுவர்.


இது ஒரு புறப்பொருள் நூலாகக் கொள்ளப்படினும் இதில் பெருமளவு அகப்பொருள் அம்சங்கள் பொதிந்துள்ளன. இந் நூல் அகப் பொருளையே பேசினாலும் புறப்பொருள் நூல்கள் வரிசையில் வைக்கப்பட்டுள்ளது.


சிறுபாணாற்றுப்படை:


     பா அளவை - 269 அடிகள் கொண்ட ஆசிரியப்பா
    
     பாடியவர் - நத்தத்தனார்


     பாட்டுடைத் த‌லைவ‌ன் - ந‌ல்லியக்கோட‌ன்


ஒய்மான் நாட்டு மன்னனான நல்லியக்கோடன் என்பவனைத் தலைவனாகக் கொண்டு எழுதப்பட்ட இந்நூல், அம்மன்னனிடம் பரிசு பெற்ற சிறுபாணன் ஒருவன் தான் வழியிற் கண்ட இன்னொரு பாணனை அவனிடம் வழிப்படுத்துவதாக அமைந்துள்ளது.


பட்டினப்பாலை:
 


     பா அளவை - 301 அடிகள் கொண்ட அகவற்பா


     பாடியவர் - கடியலூர் உருத்திரங்கண்ணனார்


     பாட்டுடைத் த‌லைவ‌ன் - சோழன் கரிகாலன்


இந்நூல் பண்டைய சோழ நாட்டின் வாழ்க்கை முறையையும், அதன் செல்வ வளத்தையும் எடுத்துரைக்கின்ற‌து.


குறிஞ்சிப்பாட்டு:


     பா அளவை - 261 அடிகள் கொண்ட ஆசிரியப்பா


     பாடியவர் - கபிலர்


     பாட்டுடைத் த‌லைவ‌ன் - பிர‌க‌தத்தா (வ‌ட‌ நாட்டு அர‌ச‌ன்)


இந்நூற்பாடல்கள் அகப்பொருள் சார்ந்த பாடல்களாகும். தினைப்புலம் காக்கச் சென்ற தலைவி ஒரு ஆண் மகனிடம் மனதைப் பறி கொடுக்கிறாள். பல காரணங்களினால் அவனைச் சந்திக்க முடியாமல் தவிக்கும் தலைவியின் நிலையை, அவள் தாய்க்கு எடுத்து விளக்குகிறாள் அவள் தோழி. இதுவே குறிஞ்சிப் பாட்டின் உள்ளடக்கம்.


பொருநாறாற்றுப்படை:


     பா அளவை - 248 அடிகள் கொண்ட ஆசிரியப்பா


     பாடியவர் - முடத்தாமக்கண்ணியார்


     பாட்டுடைத் த‌லைவ‌ன் - சோழன் கரிகாலன்


மதுரைக்காஞ்சி:


     பா அளவை - 782 அடிகள் கொண்ட ஆசிரியப்பா


     பாடியவர் - மாங்குடி மருதனார்


     பாட்டுடைத் த‌லைவ‌ன் - பாண்டிய‌ன் நெடுஞ்செழிய‌ன்


இத் தொகுப்பில் உள்ள நூல்களுள் மிகவும் நீளமானது. பாண்டி நாட்டின் தலைநகரமான மதுரையின் அழகையும், வளத்தையும் கூறுகின்ற இந்நூல், அந்நாட்டின் ஐவகை நிலங்களைப் பற்றியும் கூறுகின்றது. இப் பாட்டின் தொடக்கத்தில் தி‌ரைகடல் சூழ்ந்த ஞாலம் பற்றிப் பாடும் புலவர் பிறகு தேன் கூடுகள் நிறைந்திருக்கும் மலையுச்சிகளைப் பற்றியும் கூறுகிறார். இந்த உவமைகள் இயற்கை வளம் குறித்துப் பாடும் பொருட்டு அமைந்தவை அல்ல. வாழ்க்கை அலை போன்று நிலையில்லாதது. எனவே நல்லறங்கள் செய்து மலை போல் என்றும் அழியாப் புகழைத் ‌தேடிக்கொள் என்று மன்னனுக்கு மறைமுகமாய்க் கூறுகிறார்.


     போரின் கொடுமையை விளக்குதல்:


பெரும்பாலான புலவர்கள் மன்னனின் போர்த்திறத்தையும் போரில் பகைவரைக் கொன்றழித்ததையும் கொன்றழித்த நாட்டுக் கோட்டை‌யை அழித்து அங்கே எள் மற்றும் திவசங்கள் விதைத்ததையும் பாடுவர். மருதனாரோ போரின் கொடுமையையும் போரினால் நாடு பாழாவதையும் பாடுகிறார்.


"நாடெனும்பேர் காடுஆக
ஆசேந்தவழி மாசேப்ப
ஊர் இருந்தவழி பாழ்ஆக"



போரினால் நாடாக இருந்த இடம் காடாகும். பசுக்கள் திரிந்த வழியில் புலிகள் உலவும். ஊர் முழுதும் பாழாகும் என்று சொல்கிறார்.
 

     நாளங்காடி அல்லங்காடி:

சங்க காலத்திலும் மதுரை தூங்கா நகராய் விளங்கியதை மருதனார் மூலம் அறிய முடிகிறது. பகல் நேரக் கடைகளாகிய நாளங்காடி பற்றியும் இரவு நேரத்தில் திறக்கப்படும் அல்லங்காடி (அல் - இரவு; அல்லும் பகலும்) பற்றியும் விளக்குகிறார். கடல் நீர் ஆவியாகி மேகமாவதால் கடல் வற்றிவிடுவதில்லை. ஆறுகள் பல கடலில் வந்து கலப்பதால் கடல் பொங்கி வழிவதுமில்லை. அது போல் மக்கள் திரளாக வந்து பொருட்களை வாங்குவதால் பொருட்கள் தீர்ந்து விடுவதும் இல்லை; பல இடத்திலிருந்தும் வணிகர்கள் விற்பனைக்குப் பொருட்களைக் கொண்டு வருவதால் பொருட்கள் மிகுந்து விடுவதும் இல்லை என்கிறார்.


"மழைகொளக் குறையாது, புனல்புக மிகாது
கரைபொருது இரங்கும் முந்நீர் போல,
கொளக்கொளக் குறையாது. தரத்தர மிகாது"



இத்துட‌ன் ஓர் இரவு முழுதும் மதுரை நகரில் நடக்கும் செயல்கள் யா‌வற்றையும் மருதனார் கூறுகிறார். குலமகளிர் பண்புகள், விலைமகளிர் வேலைகள், கள்வர் திறம், காவலர் மறம் ஆகியவற்றைக் கூறி நிறைவாக மன்னன் இரவில் துயில் கொள்ளல், காலையில் பள்ளியெழுச்சி, அவனது கொடை, அறம் ஆகியவற்றை விளக்கி அவனை வாழ்த்திப் பாடலை நிறைவு செய்கிறார்.


பெரும்பாணாற்றுப்படை:
 

     பா அளவை - 500 அடிகள் கொண்ட ஆசிரியப்பா
 

     பாடியவர் - உருத்திரங்கண்ணனார்
 

     பாட்டுடைத் த‌லைவ‌ன் - தொண்டைமான் இளந்திரையன்

பேரியாழ் வாசிக்கும் பாணனொருவன் வறுமையால் வாடும் இன்னொரு பாணனைத் தொண்டைமான் இளந்திரையன் என்னும் மன்னனிடம் ஆற்றுப்படுத்துவதாக அமைந்தது இந்த ஆற்றுப்படை நூல்.


5 comments:

  1. பயனுள்ள பதிவுகள் பல காணக்கிடைக்கின்றன இங்கே எனக்கு.
    நன்றி.

    ReplyDelete
  2. @ சிவகுமாரன், தங்களின் வருகைக்கும் இவ்வலைப்பூவில் முதல் கருத்தளித்தமைக்கும் மிக்க நன்றிகள்!

    பணிசுமைக் காரணமாக இவ்வவைப்பூவில் தொடர்ந்து எழுத இயலவில்லை; இருப்பினும் இனிவரும் நாட்களில் இதற்கான நேரத்தை ஒதுக்கி தொடர்ந்து எழுத முனைகிறேன்.

    ReplyDelete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  4. பத்துப்பாட்டு - அறிமுகம் .... நன்றி ! கிளிக் S .ஜட்ஜ்மென்ட் .

    ReplyDelete